TNPSC - தேர்வுகளுக்கான அறிவிப்பு:நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது குறித்து நாளை (செப். 22) நடைபெறும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, 2021-ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையில் 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. எனினும், கரோனா தொற்று காரணமாக 38 தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கும் குருப்-2, குருப்-2(ஏ), குரூப்-4 தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த அறிவிப்புகளை லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால், போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமாமகேஸ்வரி கூறியதாவது:
2021 தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும்.
அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை எப்போது வேண்டுமானாலும் வெளியாகக் கூடும்.
எனவே, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் பாடத்தாள் தகுதித் தேர்வு சேர்க்கப்படும்.
அடுத்தடுத்து தேர்வுகளை நடத்த வேண்டியுள்ள நிலையில், தேர்வாணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதில், போட்டித் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Join WhatsApp group link
Join Telegram group link
No comments:
Post a Comment