அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை முடிவு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் மேனிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. அதேபோல நடுநிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை கொடுக்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கணக்கு பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தமிழ், சமூக அறிவியல் பாடங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதால் அந்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதால் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ த்துடன், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தகுதியடைந்தவர்களுக்கு மீண்டும் பணிநியமனத்துக்கான தேர்வை நடத்தாமல், தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அதன் பேரில், விரைவில் சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment